இத்தாலியில் டிக் டாக் சவால் செய்த சிறுமி உயிரிழப்பு..இனி புதிய நிபந்தனைகளுடன் செயலி செயல்படும்

0 2888

இத்தாலியில் 10 வயது சிறுமி ஒருவர், டிக் டாக்கில் சேலஞ்ச் ஏற்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில்((Italy)), சிசிலி ((Sicily)) தீவில் உள்ள, பலேர்மோ((Palermo)) பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை அன்று, குளியல் அறையில் மர்மான முறையில் அந்த 10 வயது சிறுமி கிழே விழுந்து கிடந்தார். நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற தனது அக்கா வரவில்லையே என நினைத்து, குளியல் அறைக்கு சென்று அச்சிறுமியின் தங்கைப்பார்த்துள்ளார்.

தனது அக்கா, கையில் கைபேசியுடன் தரையில் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10 வயதான சிறுமி, டிக் டாக்கில் "ப்ளாக்கவுட் சேலஞ்ச்"((Blackout Challenge))என்ற ஒரு சவாலை விளையாடி வந்துள்ளார். இந்த சவாலில் ஈடுபடுவோர், கைபேசி முன்னின்று தங்கள் கழுத்தை சுற்றி பெல்டினால் இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும் . பின்பு அந்த நபருக்கு மயக்கம் வந்து தெளியும் வரை அந்த பெல்ட் அவர்கள் கழுத்திலேயே இருக்க வேண்டும். இவை அனைத்தையும் தங்கள் கைபேசியில் உள்ள டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆபத்தான ப்ளாக்கவுட் சேலஞ்ச் சவாலை தான் அந்த 10 வயது சிறுமி விளையாடியுள்ளார். இதனால் மூச்சு திணறி மயக்கம் அடைத்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்து போனது தெரியவந்துள்ளது.

டிக் டாக்செயலியை பயன்படுத்துவதற்கான வயது வரம்பு 13 என்று குறிப்பிடப்பட்டபோதும், 13 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பல நிபுணர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் , 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இத்தாலியில் மட்டும் டிக் டாக் செயலி பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வயது சரிபார்க்கப்படாத பயனாளர்கள் இந்த செயலியில் விடியோக்களை பதிவேற்றம் செய்யவோ அல்லது பகிரவரோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிப்ரவரி 15 வரை விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு மேலும் தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையத்தளத்தில் என்ன செய்கிறார்கள் என்று அவ்வப்போது கண்காணிப்பது மிகவும் அவசியமான ஒன்று.இல்லையென்றால், இது போன்ற விபரீதங்கள் நேரிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments