வரலாற்றுச் சாதனைப் படைத்த அறிமுக வீரர்கள்.. சொந்த பணத்தில் ஆனந்த அதிர்ச்சி அளித்த ஆனந்த் மஹிந்திரா

0 6719

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஆறு இளம்வீரர்களுக்கு புதிய தார் எஸ்யூவி காரினை பரிசளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள், 3 இருபது ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இருபது ஓவர் தொடரை 2-1 கணக்கில் இந்தியா வென்றது. அதன் பிறகு நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு இந்திய அணி கேப்டன் கோலியும் தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பினார். அதன்பிறகு ரகானே தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா, பும்ரா, அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் கோட்டை என கருதப்படும் பிரிஸ்பேன் கபா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இளம் வீரர்களுடன் களம் கண்ட இந்திய அணி அபாரமாக விளையாடி போட்டியை வென்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது. அசத்தலாக விளையாடி தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு, பிரதமர் மோடி, கூகுள் சீஇஓ சுந்தர்பிச்சை உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பல்வேறு தடைகளைத் தாண்டி வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணிக்கு பிசிசிஐ ரூபாய் 5 கோடி போனஸ் அறிவித்தது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் தற்போது மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு அறிவிப்பினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு மஹிந்திராவின் புதிய தார் எஸ்யூவி காரினை தனது சொந்த பணத்திலிருந்து பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த மஹிந்திரா கூறுகையில், ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க தொடரில் இந்திய அணியில் ஆறு இளம் வீரர்கள் அறிமுகமாகினர். அவர்கள் படைத்த சாதனை மூலம் இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளனர். பல்வேறு தடைகளை தாண்டி அவர்கள் படைத்திருக்கும் சாதனை பாராட்டுக்குரியது. வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் அனைத்து தரப்பினருக்கும் உத்வேகம் அளிக்ககூடியது. தன்னம்பிக்கையுடன் கடினமான சூழ்நிலையில் அசாதரமான சாதனைப் படைத்த இந்திய இளம் வீரர்களுக்கு பரிசினை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments