கோவிஷீல்டு தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்தின் வளர்ச்சிக் கதை!

0 3628

குதிரை இனப்பெருக்க பண்ணையாகத் தொடங்கி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தொழிற்சாலையாக விரிவடைந்துள்ளது, கோவிஷீல்டு தயாரிக்கும் புனே சீரம் இன்ஸ்டியூட். உலகில் 170 நாடுகளில் மூன்றில் இரு குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் விநியோகிக்கும் சீரம் நிறுவனம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு தயாரிப்பு மூலம், மருத்துவத்துறையில் தவிர்க்க இயலாத ஒரு பெயராகியுள்ளது, சீரம் இன்ஸ்டியூட். இந்தியாவுக்கு மட்டுமன்றி, வேறு பல நாடுகளுக்கும் பல லட்சக்கணக்கான டோஸ்கள் கோவிஷீல்டு தயாரிக்கும் இந்நிறுவனம், 1946ஆம் ஆண்டில் ஒரு குதிரை இனப்பெருக்க பண்ணையாக தொடங்கியதாகும்.

பூனவல்லா குடும்பத்தினரால் இந்த குதிரைப் பண்ணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒரு கால்நடை மருத்துவர் தற்செயலாகக் கூறிய ஒரு விஷயம், தடுப்பு மருந்து தயாரிப்புக்கு விதைபோட்டுள்ளது. விலங்குகளின் ரத்தத்தில் இருந்து இருந்து நச்சு முறியடிப்புத் தன்மை கொண்ட சீரத்தை பிரித்தெடுக்க முடியும் என்ற அறிவியல் தகவலை மூலதனமாகப் பயன்படுத்தி, 1966ஆம் ஆண்டு சீரம் இன்ஸ்டியூட் புனே நகரில் தொடங்கப்பட்டது.

விலைமலிவான, திறனுள்ள மருந்துகளை தயாரித்ததால் விரைவிலேயே புகழ்பெறத் தொடங்கி, உலகம் முழுவதும் சந்தையை விரிவுபடுத்தியது, சீரம் இன்ஸ்டியூட். தற்போது பரந்து விரிந்து கிடக்கும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்தே 170 நாடுகளுக்கு போலியோ தொடங்கி மூளைக்காய்ச்சல் வரை பல நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 150 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு, 170 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், உலகளவில் மூன்றில் இரு குழந்தைகளுக்கு சீரம் தயாரிப்பு தடுப்பூசிகளே போடப்படுகின்றன.

40 வயதே நிரம்பிய சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா, புனே வளாகத்தை விரிவுபடுத்த அண்மைக் காலத்தில் கிட்டத்தட்ட 100 கோடி டாலர் செலவிட்டுள்ளார் என்றால் அந்நிறுவனத்தின் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ளலாம். தற்போதும் சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு, ஒப்பீட்டளவில் விலை குறைவானது என்பதோடு, சாதாரண ரெஃப்ரிஜெரேட்டர்களிலேயே பாதுகாத்து வைக்க முடியும். இந்த இரு தன்மைகளாலும் ஏழை நாடுகளுக்கும் ஏற்ற தடுப்பு மருந்தாக அமைந்துள்ளது.

ஜூலைக்குள் இந்தியாவில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அது பெருமளவுக்கு சீரம் இன்ஸ்டியூட்டையே சார்ந்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் 800 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வருவாய், கடன் ஏதுமில்லை என்ற நிலையில், கோவிஷீல்டு தயாரிப்பு, சீரம் இன்ஸ்டியூட்டை கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணிக்கு கொண்டுவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments