150 ஆடுகள் , 300 கோழிகள் வெட்டி விடிய விடிய பிரியாணி விருந்து... ஒரே ஊரில் திரண்ட முனியாண்டி விலாஸ்கள்!

0 49922

மதுரை கள்ளிக்குடி அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி, கோழிக்கறியுடன் விருந்து வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் உள்ளது. தென்னிந்திய முழுவதும் பரவியுள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டலை இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள்தான் நடத்தி வருகின்றனர். முதன் முதலில் சுப்பையா நாயுடு என்பவரால் 1937 ஆம் ஆண்டு  காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து, அடையாளப்படுத்தும்விதமாக மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் தென்னாடு முழுவதும் பரவ தொடங்கியது. நாளில் விற்பனையாகும் முதல் வியாபாரத் தொகையை முனியாண்டி கோயிலுக்கு என்று ஒதுக்குவது வடக்கம்பட்டி சுற்று வட்டார மக்களின் வழக்கம். இந்த தொகையை அப்படியே எடுத்து வந்து கோயில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடும்  வழக்கம் இன்று வரை தொடர்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முனியாண்டி கோயிலில்  திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். 86-வது ஆண்டாக நேற்று விழா தொடங்கியது. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு   முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள் மற்றும் 300- க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு  பலியிடப்பட்டு 2, 500 கிலோ அரிசி கொண்டு பிரியாணி தயார்செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதற்காக, நேற்றிரவு முதலே ஏராளமான அண்டாக்களில் பிரியாணி தயாராகி வந்தது. விழா நிறைவடைந்ததும் அதிகாலை முதல் பக்தர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

இந்த விழா குறித்து பக்தர்கள் கூறுகையில்  , ''முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் நடக்கும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் நெருங்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர். விழாவின் போது விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்'' என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments