2020 - ல் இருந்த கிணறு 2021 - ல் மாயம்... கிணறு காணாததால் ஊர்த் தலைவர் போலீசில் புகார்!
’எனது கிணற்றைக் காணவில்லை’ என்று நடிகர் வடிவேலு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி போல, ஊர்த் தலைவர் ஒருவர் பொதுக் கிணற்றைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்த சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள மொட்டவிளை கிராமத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர் செல்லத்துரை. இவர் இரணியல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், மொட்டவிளை பகுதியில் பஞ்சாயத்து நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 31.12.2020 க்குப் பிறகு கிணற்றைக் காணவில்லை. சிலர் கிணற்றை மண்ணால் நிரப்பி கிணறு இருந்த இடத்தை சமதளமாக்கி தனது சொத்தோடு சேர்த்து அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கிணறு இருக்கும் என்று நினைத்து குடிநீர் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து கட்டிமாங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலர், கல்குளம் வட்டாச்சியர் மற்றும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் நேரில் சென்று மனு கொடுத்து விளக்கியும் ஆவணங்கள் காட்டியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொது கிணறு இருந்த பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கிணற்றைக் கண்டு பிடித்துத் தருமாறும் போலீஸ் புகாரில் கூறி இருந்தார். இந்தப் புகாரை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் செல்லதுரை அனுப்பியுள்ளார்.
இந்தப் பரபரப்பு புகார் குறித்து, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, “சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் விசாரணைக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
வடிவேல் படப் பாணியில் ஊர்த் தலைவர் ஒருவர் கிணற்றைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments