கொரோனாவால் பிரிக்க முடியா காதல்.. கைகோர்த்துக்கொண்டே மரணித்த தம்பதி!

0 12543

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள், ஆனால் அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் , திருமணம் மட்டும் அல்ல, மரணமும் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று தனது அன்பினால் நிரூபித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 90 வயது முதியவர் Dick. அவரது மனைவி 87 வயதுடைய Shirley Meek. இவர்கள் கடந்த டிசம்பர் 22ம் தேதியன்று தங்களின் 70வது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். எனினும் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா, இவர்களையும் விட்டுவைக்கவில்லை. இருவருக்கும் சொல்லி வைத்தார் போல ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ம் தேதியன்று கொரோனா வைரஸ் தொற்று இவர்களுக்கு உறுதியான நிலையில், அங்குள்ள ரிவர் சைட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் வெவ்வேறு அறைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இருப்பினும் வயது மூப்பின் காரணமாக அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இத்தம்பதியரின் மகன் மற்றும் மகள்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் அணுகி, தங்களின் பெற்றோர் இருவரும் மரண தருவாயில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளனர். அதன்படியே செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர், பெரிய அறை ஒன்றில் இருவரையும் அருகருகே தங்கவைத்தனர்.

நர்ஸ் ஒருவர் Dick அருகே Shirley Meek-ன் படுக்கையை கொண்டு வந்த போது இருவரும் தங்களின் கரங்களை பற்றிக்கொண்டனர். “பரவாயில்ல நாம் இப்போது போகலாம்” (it’s OK to let go now) என மனைவி கணவரிடம் கூறியிருக்கிறார். “நான் உனக்காக காத்திருப்பேன்” என கூறிய சிறிது நேரத்திலேயே மனைவி மரணத்தை தழுவ, அவர் இறந்த சில நிமிடங்களிலேயே கணவர் Dickம் காலமானார்.

70 ஆண்டுகாலம் திருமண பந்தத்தில் அன்பாக, ஒன்றாக பயணித்த தம்பதியர் மரணத்திலும் ஒன்றாக சேர்ந்தே பயணித்தது கண் கலங்கச் செய்தது. இது தொடர்பாக அத்தம்பதியரின் மகன் Howell கூறுகையில், “பெற்றோரின் மரணத்தால் எங்கள் இதயங்களை சிதைந்துவிட்டன, இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே சொர்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை பெற்றுள்ளனர். எத்தனை பேருக்கு இது கிடைக்கும் என கூறினார்.

70 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த Dick - Shirley Meek தம்பதியருக்கு 5 குழந்தைகளும், 13 பேரக் குழந்தைகளும், 28 கொள்ளுப் பேரன் - பேத்திகளும் உள்ளனர். தற்ப்போது இந்த அன்புத்தம்பதி குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments