இன்னொரு பிறவி உண்டென்றால்; தமிழனாகப் பிறப்பேன் : நேதாஜி!

0 12192

இன்னொரு பிறவி உண்டென்றால் ; தமிழனாகப் பிறப்பேன் என்று 1939ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் வீரமுழக்கமிட்டார் ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

1897ஆம் ஆண்டு சனவரி 23ஆம் நாள் மேற்கு வங்கத்தில் பிறந்தார் சுபாஷ். 125ஆம் ஆண்டு பிறந்தநாளில் அவரை நினைவுக்கூர்வோம். 27தலைமுறைகளாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றிய பெருமை அவரது குடும்பத்துக்கு உண்டு. பள்ளி படிப்பை கொல்கத்தாவில் முடித்த அவர், மேற்படிப்பை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

இன்றைய ஐஏஎஸ் தேர்வானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐசிஎஸ் தேர்வாக நடத்தப்பட்டது. அத்தேர்வை எழுதிய நேதாஜி, இந்திய அளவில் நான்காவது இடத்தில் தேர்ச்சிப் பெற்றார். ஆயினும், நம் தாய் நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் அடிமையாக இருந்து பணிசெய்ய விரும்பாமல் ; அவருக்குக் கிடைத்த உயர் பதவியான இந்திய குடிமை பணியை ஏற்காமல், அவற்றை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்தார். சிலர் ஐசிஎஸ் பதவியை ஏற்க சொன்னார்கள்.

உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் போதும். நம் தேசத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவே இருக்க விரும்புகிறேன். அதற்கு ஐசிஸ் பயன்படாது என்று மறுத்துவிட்டார் நேதாஜி.இளமை பருவத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்து கொண்டார்.  போராட்டம் பலகண்டார் ; அதற்காக ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்டு, ஆறுமாத காலம் சிறைவாசத்தையும் அனுபவித்தார்.

'பார்வர்ட்' எனும் ஆங்கில் இதழில் ஆசிரியரான நேதாஜி, ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்துவத்தை எதிர்த்து உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். அதன் மூலம் இந்திய மக்களின் இதயங்களில் விடுதலை உணர்வை ஊட்டினார். பின்னாளில் கொள்கை முரண்பாட்டால் காங்கிரஸில் இருந்து விலகிய போஸ், அகில இந்திய பார்வர்ட் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவரானார்.

அதன்பின் 1942 ஆம் ஆண்டு இந்தியத் தேசிய இராணுவத்தை ஆரம்பித்தார்.அவரது படையில் 600 தமிழர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்து அங்கு சென்ற தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், 'ஜான்சி ராணி' பெயரில் படையொன்றை உருவாக்கினார். அதில் 1500 பேர் இடம் பெற்றிருந்தனர். அப்படைக்கு தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி சேகலை கேப்டனாக நியமித்தார்.நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி, தைவான் விமான விபத்தில் இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடந்த விமான விபத்தில் அவர் இறக்கவில்லை என்று பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜே.பி.பி மோரே கூறியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்று வரை உறுதி செய்யப்படாததால், இறவா வரம்பெற்ற இந்திய தலைவராக இன்றளவும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments