நெல்லுக்கு வேலியிட்ட ஈசன் திருநெல்வேலியானது.. திருவிளையாடல் நிகழ்வு விமரிசையாக நடைப்பெற்றது!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
சோழ தேசத்துக் கோயில்கள் என்பது போல், பாண்டிய நாட்டு திருத்தலங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பாண்டிய தேசத்துக்குக் கோயில்களில் மிக முக்கியமான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயில். ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று எனப் பெருமை கொண்ட இந்தக் கோயில், தென் வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக சுமார் 378 அடி அகலமும் கொண்டு பிரமாண்டமாக அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு தோறும் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் . இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 12 நாள் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்து வருகிறது. . 4 -ம் நாள் திருவிழாவாக சுவாமி சன்னதியில் திருநெல்வேலி என பெயர் வரக்காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் விமரிசையாக நடைபெற்றது.
முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம், சதாசர்வ காலமும் சிவனையே நினைத்து வணங்கி பூஜித்துக் கொண்டிருந்தார்.
பக்தரை சோதிக்க நினைத்த சிவபெருமான், அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக, வேதப்பட்டர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜையை நடத்தி வந்தார்.
அப்படி சேகரித்த நெல்மணிகளையெல்லாம் வெயிலில் உலரப் போடுவது வேதபட்டரின் வழக்கம். அப்படித்தான் அன்றைக்கும் வீடுவீடாகச் சென்று சேகரித்த நெல்மணிகளையெல்லாம் வெயிலில் உலரப் போட்டிருந்தார். பிறகு குளிப்பதற்காகச் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவனுக்கு நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி, கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் சூரிய கதிர்களால் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. நெல் இருந்த இடத்தில் மட்டும் நன்றாக வெயில் அடித்துள்ளது.
நெல்லுக்கு வேலியிட்டு காத்தருளியது ஈசனே என உணர்ந்து நெடுஞ்சாண்கிடையாக நெல்வேலியைப் பார்த்து வணங்கி பூரித்தார் வேதபட்டர் வேணுவனம். அன்று முதல் நெல்வேலி நாதர் என்றும் நெல்லுக்கு வேலியிட்ட ஈசன் என்றும் திருநாமம் அமைந்தது. இதுவே நாளடைவில் திருநெல்வேலி என்று அமைந்துப்போனதாக ஸ்தல புராண வரலாறுகள் கூறுகின்றது.
வருடந்தோறும் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் எனும் திருவிழா நெல்லையப்பர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. சுவாமி சன்னதி மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்து நெல் நனையாமல் காக்கப்பட்டது போன்றும் திருவிளையாடல் வைபவம் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
Comments