ரூ.7 கோடி நகைகள் கொள்ளை... வடமாநில கொள்ளையர்களா ? தீவிரமாகும் விசாரணை

0 4098

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து துப்பாக்கியக் காட்டி ஏழு கோடி ரூபாய் மதிப்பில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஓசூர் - பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் காலை 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ஊழியர்களை மடக்கி, அவர்களின் பின்னங்கைகளை கட்டிப்போட்டுள்ளனர். 

தலைக்கவசம், கையுறை, முகக்கவசம் சகிதம் வந்திருந்த கொள்ளையர்கள் ஊழியர்களை மிரட்டி, நகைப்பெட்டகத்தின் சாவியைப் பெற்று சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளையும் 96 லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கொள்ளையர்கள் ஊழியர்களை கட்டிப்போட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தை பெரிய பை ஒன்றில் அடைத்து எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஊழியர்களிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டபோது, அது தேசிய நெடுஞ்சாலை வரை சென்று அங்கேயே நின்றிருக்கிறது. எனவே கொள்ளையர்கள் கர்நாடகா பக்கம் சென்றிருக்கலாம் என்ற அழுத்தமான சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து போலீசார் சார்பில் கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அதில் 5 தனிப்படைகள் கர்நாடகா சென்றுள்ளன. இதனிடையே கொள்ளை சம்பவத்தின்போது ஒரு வாடிக்கையாளர் உள்ளே சிக்கியிருந்ததாகவும் கொள்ளையர்களில் சிலர் ஹிந்தியில் பேசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே வந்தவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாகியுள்ளது.

இந்த நிலையில் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நகைகள் வைக்கப்பட்டிருந்த காலிப் பெட்டிகள், சிறு சிறு பைகள் உள்ளிட்டவை இரு மாநில எல்லைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி - ஆனேக்கல் சாலை கர்ப்பூர் என்னுமிடத்தில் அவற்றை கொள்ளையர்கள் வீசி சென்றுள்ளனர். அங்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே, ஓசூரில், முத்தூட் பைனாஸ் கிளையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், துரதிருஷ்டவசமான நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளது. காவல்துறையினரின் அனைத்துவிதமான விசாரணைகளுக்கும், குற்றவாளிகளுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்கத்தை பெறும்போது, அவற்றின் மீது உடனடியாக இன்சூரன்ஸ் செய்யப்படுவதால், கொள்ளைபோன தங்கத்தை நினைத்து, யாரும் கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளது. இனியொரு சம்பவம் இதுபோல் நடைபெறாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments