தீயாய் செயல்படும் “தீ” செயலி புதுயுகத்துக்கான புதிய அறிமுகம்
ஆபத்துக்காலத்தில் காவல்துறையை உடனடியாக அழைக்க “காவலன்” செயலி அறிமுகமானது போல், தற்போது, தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணித்துறையை உடனடியாக அழைக்க, “தீ” என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட “காவலன்” செயலி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் இந்த “தீ” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தீயணைப்புத்துறையை தொடர்புகொள்ள 101 என்ற எண் இருந்தாலும், இன்றைய “ஆண்றாய்டு” கால நவீன யுகத்துக்கு இந்த தீ செயலி பெரும் உதவியாக இருக்கும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது போலவே, இந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் நமது செல்போன் எண் மற்றும் பெயரை பதிவு செய்துகொண்டால், உடனடியாக செயலி பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது.
தீ விபத்து ஏற்படும்போது, இந்த செயலியில் தோன்றும் “உதவி” என்ற பொத்தானை தொட்டால் போதும், அடுத்த 5 விநாடிகளில் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு இருப்பிடம் குறித்த விவரங்கள் ஜிபிஎஸ் மூலமாகச் சென்றுவிடும். தொடர்ந்து நமது பகுதிக்கு அருகே இருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்துவிடுவார்கள் என்கின்றனர் தீயணைப்புத்துறை அதிகாரிகள்.
செயலியில் உள்ள “உதவி” பொத்தானை அழுத்தியதும் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் பயனாளர்களுக்கு அழைப்பு வருகிறது. தீ விபத்தின் தன்மை, அதில் சிக்கியிருப்பவர்களின் விவரங்கள் குறித்து நமக்குத் தெரிந்த தகவல்களை அவர்களிடம் கூறலாம்.
இது அவர்களது பணியை இன்னும் துரிதப்படுத்துகிறது. தீ விபத்து, வெள்ள பாதிப்பு, ஆழ்துளை கிணறு விபத்து, அபாயகரமான கழிவுகள் கசிவு, விலங்குகள் மீட்பு என பல்வேறு பிரச்சனைகளுக்கும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தும் அனைவருமே இந்த செயலியை பதிவிறக்கம் செய்துவைத்துக்கொள்வது நல்லது என்றும், பெரும் உயிர்ச்சேதம், பொருட்சேதம், நேர விரயம் ஆகியவற்றை தவிர்க்கலாம் என்றும் தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Comments