கங்காரு கேக் வெட்ட மறுப்பு... ஆட்டத்தில் மட்டுமல்ல நடத்தையிலும் , ஆஸ்திரேலியர்களை வீழ்த்தினார் ரகானே!

0 25802

விளையாட்டுலகில் விதிகளுக்குட்பட்டு விளையாடும் அணிகளும் சரி... வீரர்களும் சரி எப்போதும் ரசிகர்களின் மனதுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், இந்திய ஸ்டேன்ட் இன் கேப்டன் ரகானே செய்த ஒரு விஷயம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை தொட்டு விட்டது.

விளையாட்டு உலகில் ஃபேர் பிளே என்ற தனி விருது உண்டு. உலகக் கோப்பை கால்பந்து போன்ற பிரமாண்ட தொடர்களில் விதிகளுக்குட்பட்டு ஆடும் அணிகளுக்கு ஃபேர் பிளே விருது வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஒரு விசித்திரம் நடந்தது. ஜப்பான் அணி ஹெச் பிரிவில் இடம் பெற்றிருந்தது. இந்த பிரிவில் இருந்து கொலம்பியா அணி ஏற்கனவே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி விட்டது. ஜப்பான் அணியும் செனகல் அணியும் தலா 3 புள்ளிகள் பெற்றிருந்தன. இந்த தருணத்தில், விதிகளுக்குட்பட்டு சிறப்பாக ஆடிய அணி என்ற விதத்தில் ஜப்பான் அணிக்கு இரண்டாவது சுற்றில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. பவுல் ஆட்டம் அதிகமாக ஆடிய செனகல் வெளியேற்றப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி ஒரு விசித்திர சாதனையை ஜப்பான் அணி படைத்தது.

அப்படியென்றால், இந்த தருணத்தில் உங்களுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரக் கூடும். அதுதான் ஒழுக்கம். விளையாட்டுலகில் ஒழுக்கத்தை கடைபிடித்து ஆடுபவர்கள் தோற்றாலும் வென்றவர்களாகவே கருதப்படுவார்கள். ஆனால், ஜப்பான் கதை ஆஸ்திரேலியர்களுக்கு கிஞ்சித்தும் பொருந்தாது. நடந்து முடிந்த காவஸ்கர் - பார்டன் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறியும் வீரர்களின் ஒழுக்கமின்மையும் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சு, பேட்டிங் இவற்றை தவிர்த்து ரசிகர்கள் மற்றும் வீரர்களின் ஸ்லெட்ஜிங்கையும் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.image

ஆனாலும், முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய கேப்டன் அஜிங்கிய ரகானே சிறப்பாக அணியை வழி நடத்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி விட்டார். இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு இது 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். போட்டி முடிந்ததும், இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட இந்திய ஜெர்சியை லயனுக்கு பரிசாக வழங்கி கவுரவித்தார் ரகானே. ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்ல தாய் நாடு திரும்பிய பிறகும் இந்தியர்களின் பெருந்தன்மைமிக்கவர்கள் என்பதை நிரூபித்தார் ரகானே.

ஆஸ்திரேலியாவில் இருந்து தாயாகம் திரும்பிய கேப்டன் ரகானேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரின் நண்பர்கள் முடிவு செய்திருந்தனர். அதற்காக, ஒரு ஸ்பெஷல் கேக் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. அந்த கேக் கிரிக்கெட் பிட்ச்சில் கங்காரு இருப்பது போலவும் அதன் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியிருப்பத போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ரகானே, கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. ஆஸ்திரேலிய அணியை கூட கங்காரு என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அப்படியிருக்கையில், கங்காரு கேக் வெட்டு நாகரீகமான விஷயமாக இருக்காது என்று கூறி வெட்ட மறுத்தார். பிறகு, கங்காரு அகற்றப்பட்டு கேக் வெட்டினார். சோ... களத்தில் மட்டுமல்ல நடத்தையிலும் ஆஸ்திரேலியர்களை வீழ்த்தியுள்ளார் ரகானே என்றுதான் சொல்ல வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments