இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழப்பு : இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம்

0 1010
இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழப்பு : இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம்

இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக்கப்பல் மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது தொடர்பாக, இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நால்வரும் மீன்பிடிக்க கடந்த 18ம் தேதி கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதில் கடலுக்குள் விழுந்த 4 மீனவர்களும் மாயமாகினர். இதையடுத்து அவர்களைத் தேடும் பணிகள் நடந்த வந்த நிலையில் 4 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய தூதர் மூலம், இலங்கை வெளியுறவு அமைச்சருக்கும், டெல்லியிலுள்ள இலங்கை பொறுப்பு தூதரிடமும் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை தூதரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வரும் இலங்கை அரசை கண்டித்தும் வரும் 24ம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 இதனிடையே தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மைத் தன்மை தெரியும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments