தெருவில் செயின் பறிப்பு.. அம்மா நகை அபேஸ்.. ஆன் லைன் கேம் விபரீதம்..! பள்ளி மாணவன் கைது
சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிக் கொடுத்த செல்போனில், கலர் டிரேடிங் என்ற புதுவித லாட்டரி சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், தாயின் நகையை அடமானம் வைத்து சூதாடித் தோற்றதோடு, தெருவில் நடந்து சென்ற பெண்ணின் நகையை பறித்து போலீசில் சிக்கியுள்ளார்.
ஒரு நம்பர் லாட்டரியின் மறுவடிவமாக செல்போன் செயலி வடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஊடுருவியுள்ள சூதாட்ட செயலி தான் கலர் டிரேடிங் ஆப்..!
சிவப்பு, பச்சை, வயலட் என மூன்று வண்ணங்களுடன் பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களைக் கலந்து, குறிப்பிட்ட எண் மீதோ , அல்லது கலர் மீதோ பணம் கட்டினால் இரு மடங்கு முதல் 10 மடங்கு வரை பணம் தருவதாகக் கூறி, கொடுப்பது போல ஆசைக்காட்டி மொத்த பணத்தையும் பறித்துக் கொள்ளும் சூதாட்ட செயலியில் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிக் கொடுத்து தவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீசில் சிக்கிய 11 ஆம் வகுப்பு மாணவனிடம் விசாரித்த போது, ஆன்லைனில் கலர் டிரேடிங் சூதாட்டத்திற்கு அடிமையானதால் மாணவன் கொள்ளையனான பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக அந்த மாணவனுக்கு பெற்றோர் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். இதில் கலர் டிரேடிங் என்ற லாட்டரி ஆப்பை டவுன்லோடு செய்து ஆரம்பத்தில் நூறு, ஐம்பது என்று பணம் கட்டி விளையாடி வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள பணத்தை திருடியும், விட்டதை பிடிப்பதாக நினைத்து தாயின் நகையை அடமானம் வைத்தும் 50 ஆயிரம் ரூபாயை லாட்டரி விளையாட்டில் பறிகொடுத்துள்ளான்.
வீட்டில் இருந்த நகை காணாமல் போனதாக எண்ணி தாய், தேடுவதை அறிந்ததும் அதில் இருந்து தப்பிக்க புதிதாக செயின் பரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளான். சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்ற ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துச்சென்றுள்ளான் அந்த மாணவன்.
நகையை விற்று கிடைத்த பணத்தை கொண்டு, தாயின் நகையை அடகுக் கடையில் இருந்து மீட்டு வந்து எடுத்த இடத்திலேயே வைத்துள்ளதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
தங்க சங்கிலியை வழிப்பறி செய்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள மாணவனின் வீட்டுகே சென்று அவனை கைது செய்ததாக தெரிவித்தனர்.
ப்ளூவேல், பப்ஜி , ஆன் லைன் ரம்மியை தொடர்ந்து கலர் டிரேடிங் என்கிற இந்த லாட்டரி சூதாட்டத்தை தடை செய்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments