வணக்கம் டா மாப்ள..... சொந்த ஊருக்கு வந்தடைந்த சேலத்து விரைவு ரயில் நடராஜன்!
கெத்தாக கங்காரு தேசத்தில் கொடியை நாட்டி, சின்னப்பம்பட்டி வந்தடைந்த சேலத்து விரைவு ரயில் நடராஜனுக்கு ஊர்மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. டெஸ்ட் போட்டியிலும், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி, இந்தியா புதிய வரலாற்று சாதனையை படைத்தது.
விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. இதனைதொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணிக்கு தங்களது பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள். வீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே, ரோகித்சர்மா, பிரித்விஷா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.
ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். ஐபிஎல் போட்டியின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு நடராஜன் நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டார். இதனால் அவரது குழந்தையை அவரால் உடனடியாக பார்க்க முடியாமல் போனது. இந்த தியாகத்துக்கு கிடைத்த பரிசாக நடராஜன், ஒரே தொடரில் ஒருநாள், டெஸ்ட், டி -20 என மூன்று விதமான போட்டிகளிலும் பங்குப்பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூரு வந்தடைந்த நடராஜன், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு, வருகிறார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்சாகம் அடைய செய்தது.
இந்த நிலையில், நடராஜனை வரவேற்கும் விதமாக சின்னப்பம்பட்டி ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நடராஜன் சேலம் சின்னப்பம்பட்டிக்கு வந்தவுடன், மேள தாளங்கள் முழங்க, பட்டாசு சத்தம் விண்ணைப்பிளந்தது. அவரது ஊர்மக்கள் மாலை அணிவித்து, குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் யார்க்கர் மன்னனை அழைத்து வந்தனர். இதனால் சின்னப்பம்பட்டியே விழாக்கோலம் பூண்டது.
முன்னதாக, நடராஜனுக்காக அமைக்கப்பட்ட விழா மேடை ஒன்று கொரோனா விதிமுறைகளை காட்டி அகற்றப்பட்டது. மேலும் அவரது, பெற்றோரிடம் நடராஜன் வெளிநாட்டில் இருந்து வருவதால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவிறுத்தியுள்ளனர்.
சேலத்து சின்னப்பம் பட்டியில் அடையாளம் தெரியாதவராய் இருந்தவருக்கு, இன்று ஒட்டுமொத்த கிராம மக்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே வரவேற்பு அளிப்பதெல்லாம் நடராஜனின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே.
Comments