பால் தினகரனை சென்னை வரவழைத்து விசாரிக்க ஐடி அதிகாரிகள் திட்டம்

0 25727
இயேசு அழைக்கிறார் மதப் பிரச்சார நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் வருமானவரித்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருக்கும் பால் தினகரனை சென்னை வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இயேசு அழைக்கிறார் மதப் பிரச்சார நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் வருமானவரித்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருக்கும் பால் தினகரனை சென்னை வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.  

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான
25 இடங்களில் மட்டும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 300 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரன் வீடு, அடையாறு, பாரிமுனையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கூட அலுவலகங்கள், தாம்பரத்தில் உள்ள SEESHA அறக்கட்டளை அலுவலகத்திலும் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவையில் சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்திலும், லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும் இரண்டாம் நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. காருண்யா பள்ளி மற்றும் பல்கலைக் கழகத்தின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கு சலுகையை பயன்படுத்தி, விதி மீறல்கள் நடந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.

கல்வி நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் ஜெப கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறக்கட்டளைக்கு வந்த நிதியை விட செலவு செய்த தொகைக்கு அதிகம் கணக்கு காட்டப்பட்டதாகவும் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பால் தினகரனின் வெளிநாட்டு முதலீடுகள், இந்திய முதலீடுகள் குறித்தும் அது தொடர்பான பண பரிவர்த்தனை ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக நிர்வாகிகள், கணக்காளர்கள், ஆடிட்டர்கள் ஆகியோரையும் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், வங்கி தொடர்பான ஆவணங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் சோதனை முடிந்த பிறகே அது பற்றி தெரிவிக்க முடியும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வருமான வரி சோதனை நடைபெறும் நிலையில், பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் இல்லை. அவர்கள் கனடாவில் இருப்பது தெரிய வந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பால் தினகரனை சென்னைக்கு வரவழைத்து விசாரிக்க வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments