மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு எதிர்ப்பு
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச்செய்யும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் பத்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட்தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதுவை அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் இந்த பதில் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை என்றும், அரசுப்பள்ளி மாணவர்களை கொச்சைப்படுத்தும் செயல் என்றும், மனுதாரர் தரப்பில ஆஜரான வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, மனு குறித்து 4 வாரத்துக்குள் முடிவெடுத்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Comments