நல்லா இருந்த சாலைகளும்.... சுரண்டி போட்ட அதிகாரிகளும்..! சீரமைப்பு எப்போது?
சென்னை வடபழனி - ஆற்காடு சாலை சீரமைப்பிற்காக சுரண்டப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை நகரின் பிரதான சாலைகளுள் ஒன்று, கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி வழியே ஆழ்வார் திருநகர் செல்லும் ஆற்காடு சாலை. கடந்த 30 நாட்களுக்கு முன்பு, வடபழனியில் இருந்து ஆழ்வார் திருநகர் வரை, ஆற்காடு சாலையின் இருபுறமும் மறு உருவாக்கத்துக்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சுரண்டப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாததால், வடபழனி, கோடம்பாக்கம், பூவிருந்தவல்லி, போரூர் போன்ற மிக முக்கிய பகுதிகளுக்கு ஆற்காடு சாலை வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பெண்கள், வயதானவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்கள் என்று அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாலையின் மோசமான தன்மையால், அதிக தூரம் குறுக்கு சந்துகளில் பயணிப்பதால் பொருள் இழப்பும், மன உளைச்சலும், உடல் அலுப்பும் ஏற்படுவதாக ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறுகின்றனர்.
இச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சரியான பிடிமானம் இல்லாததால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் அல்லலுற்று பயணிக்க வேண்டியிருப்பதாக தினசரி ஆற்காடு சாலையைப் பயன்படுத்துவோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இவ்வழியாக பயணிக்கும் பலரும் அடிக்கடி விபத்துக்களை சந்திப்பதாகவும் நிம்மதி இல்லாமல் கடும் அவதி உடன் பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாலும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments