காதல் ராஜசிம்மனும் 3 அம்மணி அக்காக்களும்..! ரூ.28 லட்சம் பறித்த கதை

0 7269

ஹைதராபாத்தில்  நடந்த சம்பவத்துக்கு சென்னையில் வழக்குப் பதிவு செய்து, தொழில் அதிபரை மிரட்டி 28 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு அவரையே கைது செய்த, ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜசிம்மன். இவர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி என்ற பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜசிம்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு வருடம் கழித்து தற்போது இந்த வழக்கு பல்வேறு குளறுபடிகளுடனும், குழப்பத்துடனும் பொய்யாக புனையப்பட்டிருப்பது நீதிமன்றம் மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2018- ல் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமா ராணி என்பவர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து மேட்ரிமோனியல் மூலம் தொழிலதிபர் ராஜசிம்மனுக்கு அறிமுகமானார். உமாராணியும், சென்னையில் அழகு நிலையம் நடத்தி வரும் விஷ்ணு ப்ரியாவும் ஒரே நேரத்தில் ராஜசிம்மனை காதலித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் தன்னுடன் விடுதியில் தங்கி இருந்த போது ராஜசிம்மன் வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் உமாராணி கொடுத்த புகாரை வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார் பெண் ஆய்வாளர் ஞானசெல்வம். இதற்கு விஷ்ணு பிரியாவும் உடந்தையாக இருந்துள்ளார். ராஜசிம்மனை கைது செய்யாமல் இருக்க ஆய்வாளர் ஞானசெல்வம் உட்பட மூன்று பேரும் சேர்ந்து மிரட்டி 28 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்திற்கு சென்னையில் அதுவும் எந்த தொடர்பும் இல்லாத ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்தது ஏன் ? என்று எழுந்த கேள்வியால் காவல் ஆய்வாளர் ஞானசெல்வம் உள்ளிட்ட 3 பேர் வழக்கில் சிக்க வழிவகுத்துக் கொடுத்தது.

ராஜசிம்மன் சிறையில் இருந்தபோது, அவரிடம் பறிமுதல் செய்த டெபிட், மற்றும் கிரடிட் கார்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காத ஆய்வாளர் ஞானசெல்வம், அவ்வப்போது ஏ.டி.எம்.இல் பணம் எடுத்ததாக கூறப்படுகிறது. ராஜசிம்மன், சிறையில் இருந்த போது ஆய்வாளர் உட்பட மூன்று பெண்களும் பயன்படுத்திய தனது வங்கி கடன் அட்டைகள் தொடர்பான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் ஞானசெல்வம் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல, ராஜசிம்மனை மிரட்டி விமான டிக்கெட் எடுத்ததாக கூறி அதற்கான ஆதாரமும் கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் ராஜசிம்மன் மீது போடப்பட்டது பொய்வழக்கு எனவும், ஆய்வாளர் ஞான செல்வம் உட்பட 3 பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் பெண் ஆய்வாளர் ஞானசெல்வம், உமா ராணி மற்றும் விஷ்ணுப்ரியா ஆகிய மூன்று பேர் மீதும் திருட்டு, மோசடி, கொலை மிரட்டல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆய்வாளர் ஞானசெல்வம் மீது எந்த துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகளிர் காவல் நிலையங்களில் கவுன்சிலிங் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நீண்டகாலமாக புகார் இருந்துவந்த நிலையில், பெண் காவல் ஆய்வாளர் லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments