நடந்து வந்த சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்றது ஏன் ? சிறையில் நடந்தது என்ன ..?

0 45783

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா,திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சிவாஜி நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸில் ஏறி நடந்து வந்தவர், சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சசிகலா தனது 4 வருட சிறை வாழ்க்கையை முடித்து விரைவில் வெளியே வர இருக்கிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிற 27 ந்தேதி விடுதலையாக இருப்பதாக சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், புதன்கிழமை மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்டு, சிவாஜி நகர் போரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முகக் கவசத்துடன் ஆம்புலன்ஸில் சென்ற சசிகலாவை மருத்துவமனை ஊழியர்கள் சக்கர நாற்காலியில் அமரவைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு இருமலுடன் காய்ச்சல் இருப்பதாகவும், சுவாசிக்கும் திறன் 79 சதவீதமாக இருப்பதால், ஆக்சிஜன் மூலம் தடையின்றி சுவாசித்து வருவதாகவும் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், சசிகலாவுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அடுத்த சில நாட்களில் விடுதலையாக இருக்கும் சசிகலாவின் அரசியல் பயணம் எப்படி இருக்கும்? என்பது விவாதப்பொருளாக மாறி இருக்கின்ற நிலையில், ஆம்புலன்ஸில் இருந்து இறங்கி நடந்து சென்றவர், சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்டது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆக்ஸிஜன் பொருத்துகின்ற அளவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் இல்லாமல், சாதாரணமாக சக்கர நாற்காலியில் சென்ற சசிகலா, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் ஏதாவது இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் சசிகலாவின் திடீர் உடல் நலக்குறைவு செய்தி, அவரது வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆதரவாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments