கேதார் ஜாதவ் உட்பட ஆறு வீரர்கள் நீக்கம்... சிஎஸ்கே மீண்டும் சிங்கநடை போடுமா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

0 4577

இந்தாண்டு நடைப்பெற இருக்கும் ஐபிஎல் டி20 தொடரில் கேதார் ஜாதவ், முரளிவிஜய் உட்பட ஆறு வீரர்களை நீக்கியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டை பிரிக்கமுடியாத ஒரு மதமாக கருதும் இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டி மாபெரும் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. அதிரடியாக தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் கொரோனாவிற்கு இடையிலும் பார்வையாளர்களே இல்லாமல் நடந்த கடந்தாண்டு வரையிலும் ஐபிஎல் வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

அணிகளில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணியாக உள்ளது டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ’டேடிஸ் ஆர்மி’ என்று அன்போடு அழைக்கப்படும் அணியில் டோனி, ஷேன் வாட்சன், டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் உள்பட அணியில் இருந்த முக்கால் வாசி வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள்.

கடந்த 2013ம் ஆண்டு சென்னை அணியின் முதன்மை அதிகாரி, குருநாத் மெய்யப்பன், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்கவில்லை. தடைகாலம் முடிந்த பிறகு 2018ம் ஆண்டு டேடிஸ் ஆர்மியாக களம் கண்ட சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 2019ம் ஆண்டில் இரண்டாம் இடம் பிடித்தது.

கொரோனா தொற்று பரபரப்புக்கு இடையிலும் அமீரகத்தில் கடந்தாண்டு நடந்த ஐபில் தொடரில் முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், சென்னை அணியில் அதிரடியாக விளையாட இளம் வீரர்கள் இல்லை எனவும், 30 வயதைக் கடந்த வீரர்களின் போராட்டமில்லாத ஆட்டத்தால் தான் சென்னை அணிக்கு இப்படி நேர்ந்தது எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அதோடு தொடரில் சிறப்பாக விளையாடாத கேதார் ஜாதவ், முரளி விஜய் போன்ற வீரர்களை ஏன் வைத்துள்ளார்கள் என்றும், அடுத்த ஆண்டிலாவது சென்னை அணியில் மாற்றம் இருக்குமா என ஏக்கதோடு புலம்பி வந்தனர்.

இந்த ஆண்டில் நடக்க இருக்கும் 14-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்க மற்றும் நீக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை 21-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் நடப்பு ஆண்டில் ரூ.85 கோடிக்கு மேல் ஏலத் தொகை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்று ஐபில் நிர்வாகம் அறிவித்தது

இதனால் ஐபில் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் நீக்க விரும்பும் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த நேரத்தில் ரசிகர்களின் புலம்பல் சென்னை அணியின் நிர்வாகத்தினரை கேட்டிருக்கும் போல் தெரிகிறது. கடந்த தொடரில் அதிரடியாக விளையாடாமல் ரசிகர்களின் கடுங்கோபத்தை சம்பாதித்து கொண்ட கேதார் ஜாதவை அணியிலிருந்து நீக்கியுள்ளது. அதே போல் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மற்றும் மோனு சிங் ஆகிய வீரர்களையும் நீக்கியுள்ளது. மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற ஷேன் வாட்சன், ஒப்பந்ததை முடித்துக் கொண்ட ஹர்பஜன் சிங் ஆகியோரையும் நீக்கப் பட்டியலில் சேர்த்துள்ளது.

அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கும் ஏலத்தில் ஆறு இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்ஆகியோரை சென்னை எடுக்க உள்ளது. வரும் இந்த ஆண்டு தொடரிலாவது சென்னை அணி மற்ற அணிகளைப் போல் இளம் சிங்கங்களை கொண்டு களத்தில் மீண்டும் தனது சாதனைப் பயணத்தை தொடரும் என்று எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர் சென்னை அணி ரசிகர்கள்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments