இலட்சியத்தை அடைய லட்சம் தேவை என ஆசை வார்த்தை கூறி மோசடி

0 7079

கால் டாக்சியை மாத வாடகைக்கு விட்டால் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம் என்று கார் உரிமையாளர்களுக்கு ஆசை காட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.இயல்பாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில், கடந்த மூன்று மாதத்துக்கு முன் ராஜேஷ்குமார் என்பவர் மூலம் பிரச்சனை தேடி வந்தது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், குமாரை சந்தித்துள்ளார். அப்போது கால் டாக்ஸி ஓட்டுவதால் கிடைக்கும் வருமானத்தை விட அதிக அளவில் வருமானம் பார்க்க வழி சொல்வதாகவும், இலட்சியத்தை அடைய லட்சம் தேவை என்றும் ஆசையை தூண்டும் விதமாக ராஜேஷ்குமார் பேசியுள்ளார்.

தனக்கு தெரிந்த பல தனியார் நிறுவனங்களில் கார்களை வாடகைக்கு கொடுத்தால், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் வலை விரித்துள்ளார். தன்னை ஒரு பிரபலமானவராக காட்டிக் கொள்வதற்காக மூத்த அரசியல் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காண்பித்து நம்ப வைத்துள்ளார் ராஜேஷ்குமார்.

ராஜேஷ்குமாரின் வார்த்தை ஜாலங்களை நம்பி, தனது காரை மாத வாடகைக்கு கொடுக்க அவருடன் குமார் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்தம் செய்தவுடன், காரையும் அதற்கான உண்மை ஆவணங்களையும் தன் வசப்படுத்தி கொண்டார் ராஜேஷ்குமார்.

காரின் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த குமார், மாதங்கள் பல கடந்த பிறகும் ஒரு ரூபாய் கூட வராததால், ராஜேஷ்குமார் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்த போது, அது போன்ற அலுவலகமே இல்லை என்பதை கண்டு அதிர்ந்து போனார்.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து ராயலா நகர் காவல் நிலையத்தில், கடந்த 3 மாதம் முன்பாக குமார் புகார் அளித்தார். அதன்படி விசாரணையை துவக்கிய போலீசார், ராஜேஷ்குமார் தங்கி இருந்ததாக கூறப்படும் வீட்டை தேடி சென்ற போது, போலியான முகவரி என்பது தெரியவந்தது. அடுத்த கட்டமாக அவரது செல்போன் சிக்னல் மூலம் இருப்பிடத்தைக் கண்டு பிடித்த போலீசார், மடிப்பாக்கத்தில் வைத்து அவனை கைது செய்தனர்.

விசாரணையில் ராஜேஷ்குமார் இதுபோன்று சென்னையில் பல்வேறு கால் டாக்ஸி கார் உரிமையாளர்களை, ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வந்ததும், இது தொடர்பாக அவன் மீது வளசரவாக்கம், திருவான்மியூர், அமைந்தகரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவாகி இருப்பதும் அம்பலமானது.

ராஜேஷ்குமாரிடம் இருந்து இரண்டு கார்களை பறிமுதல் செய்த ராயலா நகர் போலீசார், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments