“துண்டு சீட்டு இல்லாமல் விவாதம்” ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மீண்டும் சவால்
துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் விவாதத்துக்கு வரத் தயாரா என மீண்டும் சவால் விடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் மீது புகாரை அவர் கொடுத்துவிட்டு வழக்கை வாபஸ் வாங்குங்கள் என தங்களிடம் கூறுவதாகவும் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் தரிசனம் செய்த பின் திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தாம் ஊர்ந்து வந்து முதலமைச்சர் ஆனேன் என ஸ்டாலின் கிண்டல் செய்கிறார் என்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எந்த எக்ஸ்பிரசில் எப்படி வந்தார், எப்படி முதலமைச்சர் ஆனார் என்று மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.
காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு உத்திரமேரூர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடவோலை முறை குறித்த கல்வெட்டு கொண்ட சிவன் கோவிலை பார்வையிட்டார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகக் கூறினார்.
ஆண்டுக்கு ஆயிரத்து 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்று கூறிய முதலமைச்சர், ஆண்டுக்கு 8 ஆயிரம் ரூபாய் என எடுத்துக் கொண்டாலும் 5 ஆண்டுகளுக்கு நாற்பதாயிரம் ரூபாய்க்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம் என்றார்.
Comments