கொட்டபட்டி நாட்டுக்கத்தரிக்காய் ரகமே அழிவு... காரணம் தோல் தொழிற்சாலை கழிவு?

0 9833

திண்டுக்கலில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுவீச்சில் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக தோல் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பது திண்டுக்கல் மாவட்டத்தில்தான். தொடக்கத்தில் 5,6 தோல் தொழிற்சாலைகள்தான் திண்டுக்கலில் இருந்தன.காலப் போக்கில் 100- க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உருவாகின. சுமார் 60 வருடங்களாக தோல் தொழிற்சாலைகள் இயங்கி வந்ததால் அதிலிருந்து வெளியான கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. குறிப்பாக பேகம்பூர், குட்டியபட்டி, பொன்னிமாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துவிட்டது. தமிழகத்தில் விளையும் கத்தரிக்காய் ரகங்களில் கொட்டபட்டி பகுதியில் விளையும் நாட்டுக்கத்திரிக்காய் உலகப் புகழ் பெற்றது. ஆனால் தற்போது மாசடைந்த நச்சுத்தன்மையுள்ள நிலத்தடி நீரால் கொட்டபட்டி கத்திரிக்காய் ரகமே அழிந்து போய் விட்டது.image

நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்க தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக சுமார் ரூ. 35 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டது. இதற்காக , தனியார் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களும் நிதி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் வத்லக்குண்டு பைபாஸ் சாலையில் 1996-ம் ஆண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கப்பட்டது. ஆனால், போதுமான நிதி கொடுத்தும், சுத்திகரிப்பு நிலையம் முழு வீச்சில் இயங்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடக்கத்தில் திண்டுக்கலில் கடுக்காய், எலுமிச்சை, மரப்பட்டை போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தியே தோலை சுத்தம் செய்து வந்தனர். நாளடைவில் தொழிற்சாலைகள் பெருக பெருக உற்பத்தியைப் அதிகரிக்கும் நோக்கத்தில் அதிகமாக ரசாயனங்களைப் பயன்படுத்தினர். சோடியம் தயோ சல்பேட், கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட அமிலங்கள் அதிகளவில் தோலை சுத்திகரிக்க பயன்படுத்தப்படுவதால், ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரில் கடும் உப்பு, கார அமிலத்தன்மையோடு இருக்கும். இந்த தண்ணீரை சுத்திகரிக்காமல் குளங்களிலும், நிலங்களிலும் விடுவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.image

மாநில அரசு மற்றும் தோல் பதனிடும் ஆலை உரிமையாளர்களின் பங்களிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் ரூ. 20 கோடி ரூபாய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வழங்கப்பட்டது. ஆலையில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வண்ணம் சி.இ.டி.பி (Commen Effluent Treatmen Plant) பிளாண்ட் அமைக்க அரசு உத்தரவிட்டிருந்த. ஆனால், 15 ஆயிரம் லிட்டர் மட்டுமே சுத்திகரிக்க பிளான்ட் அமைத்துள்ளனர். அதையும் முறையாக செய்வதில்லை என்றும் தோல்ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆலையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியிடப்படும் நீரில் மரங்கள், செடிகள் எதுவும் வளர்வதில்லை. ஆலை வளாகத்தில் பட்டுப் போய் கிடக்கும் செடி கொடிகளே அதற்கு சாட்சி என்கின்றனர் திண்டுக்கல்வாசிகள்.

இது குறித்து தோல் தொழிற்சாலை உரிமையாளர் நாசர் கூறுகையில், '' கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் தொழிலே முடங்கியுள்ள நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையும் முழுமையாக செயல்படாமல் இருப்பதால் தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், சுத்திகரிப்பு நிலையத்துக்காக தமிழக அரசிடமிருந்து ரூ. 5.4 கோடியும் சமூக காடுகள் வளர்ப்புத் திட்டத்திற்காக உள்ளாட்சித் துறையிடமிருந்து 32 ஏக்கர் நிலத்தையும் பெற்று கொடுத்துள்ளார். எனவே, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாகவும் முறையாகவும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments