கருவை கண்டறிந்து கூறிய மருத்துவமனை உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை ... பாடம் புகட்டிய நீதிமன்றம்!

0 11203
தண்டனை பெற்ற டாக்டர். ராமச்சந்திரன்( பச்சை நிறத்தில் மாஸ்க் அணிந்திருப்பவர் )

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பரிசோதித்து கூறிய மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாலினத்தை முடிவு செய்தல் தடைச் சட்டத்தின்படி கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சோதனை செய்து தெரிந்துகொள்வது, ஸ்கேன் மூலம் கண்டறிவது, கருவை கண்டறிய மருத்துவர்கள் உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும். பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடை சட்டம் 1994 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, கரு என்ற வார்த்தை சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டது. ஆண் குழந்தைகளை விரும்பும் சமுதாயமாக இந்திய மக்கள் இருப்பதால் பெண் சிசுக்களை அழிப்பது தொடர்ந்தது. இதை தடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்றப்பட்டது.

பெண் சிசுக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை மீறும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்துக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். எனினும், சட்டத்தை மீறி ஆங்காங்கே கரு கலைப்புகள் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த 1980 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் ஒரு கோடி கருகலைப்புகள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

பெண் குழந்தைகளை காக்க சட்டம் வகுத்து அரசு போராடிக் கொண்டிருக்கையில் ,சட்டத்தை மீறி செயல்பட்ட மெத்த படித்த டாக்டர் ஒருவருக்கு நீதிமன்றம் பாடம் புகட்டியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரியாக்குறிச்சியில் மகாலட்சுமி என்ற பெயரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. இங்கு, கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்து சொல்வதாக பரவலாக புகார் எழுந்தது. கடந்த 2014 ம் ஆண்டு ஸ்கேன் மூலமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸார் அதிரடியாக மருத்துவமனையில் சோதனை நடத்தினர். விசாரணையில் கருவை கண்டறிந்து சொன்னது உண்மை என்று தெரிய வந்தது. இதனால், மருத்துவமனை உரிமையாளர் டாக்டர். ராமச்சந்திரன் கைது செய்யப்ட்டார். இது தொடர்பான வழக்கு நெய்வேலி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து மருத்துவர் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ,10,000 அபராதம் விதித்து நீதிபதி அபர்ணா தீர்ப்பு அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments