எல்லையில் படைகளை வாபஸ் பெறாமல் சீனா பிடிவாதம்... இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு!
அடுத்த இரு மாதங்களில் லடாக் எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறலில் ஈடுபடக்கூடுமென தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட இந்திய ராணுவம் முடிவு எடுத்துள்ளது.
கிழக்கு லடாக்கில் பல மாதங்களாக இந்தியா- சீனா ராணுவங்கள் முகாமிட்டு உள்ளன. அடுத்த இரு மாதங்களில் பனி உருகத் தொடங்கும் காலத்தில் லடாக் எல்லையில் சீனா மீண்டும் ராணுவ பலத்தை அதிகரிக்க கூடுமென இந்திய ராணுவத்திற்கான திட்டமிடல் குழு கருதுகிறது. இதனால் தான் கொல்லும் பனிக்காலத்தில் கூட சீனா தனது துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்காமல், தொடர்ந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
சீனாவில் கம்யூனிச அரசு பொறுப்புக்கு வந்து நூறாண்டுகள் ஆனதை ஒட்டி ஜூலை 1 ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கொண்டாட்டங்களில் போது சீன அதிபர் ஜி ஜின் பிங் உரையாற்ற உள்ளார். அது வரையிலும் லடாக் எல்லையில் தனது படை வலுவை சீனா எக்காரணம் கொண்டும் குறைக்காது என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதற்கு ஏற்ப இந்திய ராணுவமும் , தனது நிலைபாட்டை வலுவாக்கி உள்ளது.
எத்தனை காலம் ஆனாலும், எல்லையில் இருந்து இம்மி அளவு கூட பின் வாங்குவது இல்லை என்று இந்திய ராணுவம் முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு ஏற்ப ராணுவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.
கல்வான் பள்ளதாக்கு மோதலுக்கு பின், இந்திய ராணுவத்துடன் நேருக்கு, நேர் கைகலப்பில் ஈடுபட சீனா விரும்பவில்லை என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதே நேரத்தில் இந்திய ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுமென சீனா அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் பல முறை தலையங்க கட்டுரையில் கூறி உள்ளதை இந்திய ராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதனால் அடுத்து வரும் மாதங்களில் சீனா எந்த நடவடிக்கையிலும் இறங்க கூடும் என்றும், அதற்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வேளை லடாக்கில் வாலாட்டில் கிடைக்கும் பதிலடி, உலகின் மாபெரும் வல்லரசாக அமெரிக்காவுக்கு மாற்றாக தானே வர வேண்டுமென விரும்பும் சீனாவின் கனவை கலைக்கும் பேரிடியாக அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சீனாவின் கண்களில் மண்ணை தூவி, கடந்த ஆகஸ்டு மாதங்களில் இந்திய ராணுவம் லடாக் எல்லையில் பல இடங்களை கைப்பற்றியதை போன்ற மற்றொரு நிகழ்வு நிகழக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments