ஜோ பைடன், கமலா ஹாரீஸ் உருவத்தை தர்ப்பூசனியில் செதுக்கிய சமையல் கலைஞர்!

0 2826

தேனி மாவட்டத்தை சேர்ந்த  சமையல் கலைஞர் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரது உருவங்களை தர்பூசணியில் சிற்பமாக செதுக்கியுள்ளார். 

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்.  அதற்கான ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

துணை அதிபராக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி ஆவார்.  அதோடு துணை அதிபராக பதவியேற்கும் முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 

55 வயதாகும் கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை  ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். தாயார் ஷியாமலாவின் உறவுகள் தற்போதும் சென்னையில் வசிக்கின்றனர். அமெரிக்காவில் தாய் ஷியாமலா கோபாலன் அரவணைப்பில் கமலா வளர்ந்து வந்தார்.  தாய் ஷியாமலா இந்தியாவுக்கு வருகை தரும்போது அவருடன் கமலாவும் சென்னை வருவது வழக்கம். 

தமிழ்நாட்டுடன் இருக்கும் இந்த நீங்காத உறவு பந்தத்தின் காரணமாக உலக தமிழர்கள் அனைவரும் கமலா ஹாரிஸின் வெற்றியை தங்கள் வீட்டிலுள்ள ஒருவரின் வெற்றியாக  கொண்டாடி வருகின்றனர். ஏற்கனெவே பைடன் மற்றும் ஹாரிஸை ‘அனைவருக்குமான அதிபர்’ என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் ஒருங்கிணைந்த கலாசார பாரம்பர்யத்தை வெளிப்படுத்தவும், சனிக்கிழமையன்று தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான கோலங்கள் போடப்பட்டது. 

இந்த நிலையில், தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன் என்ற சமையல் கலைஞர் காய்கறியில் பல்வேறு சிற்பங்களை செய்து தயாரித்து வருகிறார். தற்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவிருக்கும் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக பதவி ஏற்கவுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோரது உருவங்களை தர்பூசணியில் சிற்பமாக செதுக்கி உள்ளார். பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கும் இந்த தர்பூசணி சிற்பங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments