விமானத்தில் கதறியழுத கைக்குழந்தை.. தாயுடன் பத்திரமாக டெல்லி சென்றடைந்தது!

0 4072

முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தில் 4 மாத குழந்தை நிற்காமல் அழுததால், இறக்கிவிட்டப்பட்ட குழந்தையும் தாயும் பத்திரமாக டெல்லி சென்றடைந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே பிரதமர் மோடியை சந்திப்பதற்காக திங்களன்று டெல்லி செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் சண்முகம் உட்பட 95 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்தனர்.

அதே விமானத்தில் டெல்லியை சேர்ந்த ராகுல் -லட்சுமிதேவி தம்பதியினர் அவர்களது 4 மாத கைக்குழந்தை ஆகியோரும் டெல்லிக்கு புறப்படத் தயாராக இருந்தனர். அப்போது திடீரென குழந்தை ’ஓ' வென கதறி அழத்தொடங்கியது. குழந்தையின் அழுகையை தாய் நிறுத்த எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. குழந்தை தொடர்ந்து அழுதபடியே இருந்தது.

இது குறித்து விமான பணிப்பெண்கள் விமானியிடம் கூறினார்கள். விமானி பணிப்பெண்களிடம், கைக்குழந்தையின் தாயை விமானத்தில் இருந்து கீழே இறக்கி ஓய்வுவறையில் அமரவைத்து குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லுங்கள் என்றார். டெல்லிக்கு செல்லும் அதே விமானம் மீண்டும் மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்லும். அப்போது அதில் வரச்சொல்லுங்கள் என்று  கூறினார்.

இதையடுத்து விமான பணிப்பெண்கள் உங்களை விமானத்தை விட்டு இறக்கிவிடுகிறோம். நீங்கள் மாலை விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்றனர். இதையடுத்து அந்த பெண் வேறு வழியில்லாமல் கைக்குழந்தையுடன் விமானத்தை விட்டு கீழே இறங்கினார். அவரது கணவர் ராகுல் மற்றும் மீதமிருந்த 93 பயணிகளுடன் 25 நிமிடம் தாமதமாக பகல் 12.25 மணிக்கு அந்த விமானம் டெல்லி புறப்பட்டுச் சென்றது.

கைக்குழந்தை அழுததற்காக பயணி ஒருவர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு டெல்லி புறப்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தாயும், குழந்தையும் பத்திரமாக டெல்லி சென்றடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments