ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை

0 31722

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.

பிரிஸ்பேனில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையல், இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார்.

91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். புஜாரா தனது பங்கிற்கு அரை சதம் விளாசினார்.

அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 10 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி கடைசி வரை களத்தில் இருந்த ரிஷப் பந்த் 89 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பிரிஸ்பேன் வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் வென்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணியின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் ஆர்வமும், உத்வேகமும் நன்கு புலப்பட்டதாக கூறியுள்ள பிரதமர், இனி விளையாட இருக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளதாக வாழ்த்தியுள்ளார். அதில் 3 தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பும் பெரும் மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான டெஸ்ட் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியாவில் பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி எப்போதும் நினைவு கூறப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments