ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்!- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்

0 629842
குழந்தைகளை பறி கொடுத்த தாய் கையில் பொம்மையை வைத்து கொஞ்சும் சோகம்

திருவண்ணாமலை அருகே பொங்கலுக்கு கடையில் வாங்கிய இனிப்பை சாப்பிட்ட இரு குழந்தைகள் பலியாகின. குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனி - பாஞ்சாலை தம்பதிக்கு யாசினி என்ற 6 வயது மகளும் ஹரி என்ற 4 வயது மகனும் உண்டு. பொங்கல் பண்டிகையின் போது, பழனி வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் இனிப்பு பலகாரங்களை வாங்கி வந்துள்ளார். குழந்தைகள் இருவரும் சாப்பிட்ட பிறகு, உறவினர் கடையில் இருந்து வாங்கி வந்த இனிப்பு பலகாரங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளனர்.

இனிப்பை சாப்பிட்ட பிறகு யாசினி, முதலில் மயக்கமடைந்துள்ளார் உடனடியாக , சிறுமியைஅருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிக்சை அளித்துள்ளனர். பின்னர், செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் யாஷினி இறந்து போனார். தொடர்ந்து, அன்றைய தினம் இரவே மகன் ஹரியும் மயங்கி விழுந்துள்ளார். ஏற்கனவே , மகளை பறி கொடுத்த வேதனையில் இருந்த பெற்றோர் மகனும் மயங்கி விழுந்ததால் பதறியடித்து கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மகனை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஹரியும் இறந்து போனான். அடுத்தடுத்து தங்கள் இரு குழந்தைகளையும் பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது காண்போரை கண் கலங்க வைத்தது. பாய்ச்சல் காவல் நிலைய போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தரமற்ற இனிப்பு பலகாரத்தால் புட் பாய்சன் ஏற்பட்டு குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது, இருவருரின் உடல்களும் திருவண்ணாமலை மருத்துவமனையில் உடற் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. உடற் கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரே நாளில் தன் இரு குழந்தைகளையும் பறி கொடுத்த தாய் பாஞ்சாலை கதறி துடித்தது உறவினர்களை கடும் வேதனையில் ஆழ்த்தியது. ஆற்றாமை தாங்க முடியாமல் தங்கள் குழந்தைகள் விளையாட பயன்படுத்திய பொம்மைகளை மடியில் எடுத்து வைத்து தாய் பாஞ்சாலை கொஞ்சியதை கண்டு அக்கம் பக்கத்தினர் கண்ணீர் மல்க நிற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments