அடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்

0 6087
அடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா காலமானார். அவருக்கு வயது 93.

புற்றுநோய் என்றாலே கொடூரமான நோய் என்றறிந்த காலகட்டத்தில், எல்லா புற்று நோய்களுக்கும் தீர்வு உண்டு என்று மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தவர் மருத்துவர் சாந்தா.

90 வயதைக் கடந்த பின்னரும் அவர் அயராது மருத்துவப் பணியாற்றி வந்தார். விஞ்ஞானிகளான சர்.சி.வி. ராமன், எஸ். சந்திரசேகர் வழிவந்த மருத்துவர் சாந்தா, 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை சாதனைகள் பலவற்றைப் படைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றவர் டாக்டர் சாந்தா. மகசேசே விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

அடையாறு மருத்துவமனை வளர்ச்சிக்காக கிடைக்கும் நிதியுதவி, விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை என கிடைக்கும் பணம் முழுவதையும் செலவிட்டு இன்று சர்வதேச தரத்தில் அந்த மருத்துவமனையை அவர் உருவாக்கியுள்ளார்.

உலகில் எந்த மூலையில் புற்று நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், உடனடியாக அதனை அடையாறு மருத்துவமனையில் அறிமுகம் செய்வதில் தீராத் தாகம் கொண்டவர் மருத்துவர் சாந்தா. தனது கடைசி காலம் வரை மக்களுக்காக வாழ்ந்த மருத்துவர் சாந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

டாக்டர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாக்டர் சாந்தாவின் உடலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ஏழைகளுக்கும், நலிந்த பிரிவினருக்கும் சேவை செய்வதில் முன்னணியில் நின்றதாகக் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு அளப்பரிய முயற்சிகளை மேற்கொண்ட டாக்டர் சாந்தா என்றென்றும் நினைவுகூரப்படுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் சாந்தாவின் மறைவு மருத்துவத்துறைக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் அவர் கூறியுள்ளார். டாக்டர் சாந்தாவின் தன்னலமற்ற சேவையை கவுரவிக்கும் விதமாக இறுதிச் சடங்குகளின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள டாக்டர் சாந்தா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் என்றும், அவரது மறைவு புற்றுநோய் சிகிச்சை துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தா அவர்களைப் போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்திலேயே காண்பது அரிது எனக் குறிப்பிட்டுள்ளார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தி - அம்மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர் டாக்டர் சாந்தா என அவர் கூறியுள்ளார்.

 

இதேபோல பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். டாக்டர் சாந்தாவின் உடலுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் நேரில் இறுதி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments