அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார். துணை அதிபராக பதவியேற்பதையொட்டி, தான் வகித்து வந்த செனட் உறுப்பினர் பதவியை கமலா ஹாரிஸ் ராஜினாமா செய்துள்ளார்.
நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, தலைநகர் வாஷிங்டன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் 25 ஆயிரம் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையை சேர்ந்த 4000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள பாலம் ஒன்றின் கீழ்பகுதியில் கூடாரங்களில் திடீரென நெருப்பு பற்றி எரிந்ததால் நாடாளுமன்ற வளாகம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டன. நெருப்பு அணைக்கப்பட்டாலும், அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தமது பதவிக்காலம் நாளை நிறைவடைவதால், தனக்கு விடைகொடுக்க ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ராணுவ தலைமையகமான பென்டகன் அதனை நிராகரித்துள்ளது.
Comments