பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!
கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நெல்லையில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலை உருக்குலைந்து பல்லாங்குழி சாலையாக மாறிப்போயுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையினால் மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
குறிப்பாக நெல்லை இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ராமையன்பட்டி சாலை, பேட்டையில் இருந்து நெல்லைக்கு திரும்பும் சாலை, நெல்லையில் இருந்து குற்றாலம் நோக்கிச் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன.
அதோடு மட்டும் அல்லாமல் மழைநீர் தேங்கி சாலைகள் வயல்வெளி போல் சேறும் சகதியுமாக உள்ளதால் விபத்துக்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. வாகனங்கள் பல்லாங்குழி விளையாடுவது போல் சாலையில் ஆடியசைந்து செல்வதைக் காண முடியும்.
இதனால் வாகனங்கள் பழுது ஏற்படுவதுடன் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு சாலைகளை செப்பனிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் சில பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகளுக்காகவும் சாலைப் பணிகள் முடிவடையாமல், மக்கள் தத்தி தாவிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
உயிரிழப்பு ஏற்படும் முன்பாக சாலைகளை சீரமைத்து கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments