இளையராஜாவை துரத்தும் இம்சையரசர்கள்..! உதவியா ? உபத்திரமா ?
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து மரியாதைக்குறைவாக வெளியேற்றப்பட்டதால் இசைஞானி இளையராஜா, பத்ம விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக இசைக்கலைஞர் சங்க தலைவர் தீனா தெரிவித்த நிலையில், தான் அப்படி ஏதும் தெரிவிக்கவில்லை என்று இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
40 வருடங்களுக்கு மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து பல நூறு ஹிட் பாடல்களை இசை ரசிகர்களுக்கு தந்தவர் இசைஞானி இளையராஜா.
தலைமுறைகள் மாறி புதியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை அவசர அவசரமாக வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார். அவருக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா நேரடியாக குரல் கொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இளையராஜாவின் அறை இடித்து அகற்றப்பட்டிருந்ததாகவும், அவரது படைப்புகளும் பெற்ற விருதுகளும் வெளியே வீசப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார்.
இந்த நிலையில் இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, இளையராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக கூறிக் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் இளையராஜா அவமதிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவித்ததோடு, இதனால் மன வேதனையில் உள்ள இளையராஜா தான் பெற்ற பத்ம விருதுகளையும், மாநில அரசின் விருதுகளையும் திருப்பி அளிக்கும் முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.
தீனாவின் இந்த அறிவிப்பை பார்த்து அதிர்ந்து போன இளையராஜா, தான் ஒரு போதும் அப்படி தெரிவிக்கவில்லை என்றும் அது தினாவின் சொந்தக்கருத்து என்றும் மறுப்பு வீடியோ வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இளையராஜாவிடம் இருந்து மறுப்பு அறிவிப்பு வெளியானதும், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக வழக்கம் போல மீடியாக்கள் மீது பழியை போட்டு தப்பிக்க நினைத்தார் தீனா.
இசை ஞானிக்கு உதவுவதாக கூறி தீனா போன்ற இம்சையரசர்கள் செய்யும் சேட்டைகளால் இளையராஜா கூடுதல் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளார்.
அதே நேரத்தில் 1000 படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானிக்கு விருது வழங்கி மத்திய, மாநில அரசுகள் கவுரவப்படுத்தினாலும் இடையில் இருக்கும் சங்கத்தலைவர்கள் ஆதரவு அறிக்கை என்ற பெயரில் அக்கபோர் செய்து இம்சைப்படுத்தி வருவது இந்தச்சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Comments