திறக்கப் போகும் பள்ளிகள்.... ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் நாளை முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. 10,12 ஆம் வகுப்புகள் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 10 மாதமாக மூடப்பட்டுள்ள நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து 12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் நாளை முதல் பள்ளிக்கு வர உள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி அதிகாரிகள் குழுக்களாக சென்று பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பள்ளிகளில் போதிய இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதா? கழிப்பிடங்கள் தூய்மையாக உள்ளதா? சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையிலான 74 குழுவினர் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதே போன்று சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஷெனாய்நகரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
Comments