தொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு
தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின.
நாகை அருகே கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன. அவற்றை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறி, பாதிப்படைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கேட்டு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் கடந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாகக் கூறி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகாரளித்தனர். காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், குமராட்சி பகுதிகளில் நிவர் மற்றும் புரெவி புயலால் பல ஆயிரக்கணக்கில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஹெக்டேர் ஒன்றுக்கு அரசு சார்பில் 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டதாகவும் ஆனால் அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரையே நிவாரணத் தொகையை வழங்குவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சுற்றுவட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர். கொப்புசிந்தம்பட்டி, சின்னம்பட்டி உடையநாதபுரம், வேலாயுதபுரம் உட்பட சுமார் 8 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசிபருப்பு, சோளம், கொத்தமல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையில் சிக்கி சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கேட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர், மற்றும் மிளகாய், பருத்தி, சிறுதானிய வகைகள் மழை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளிகளில் மானாவாரியாகப் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், கம்பு, பாசிப்பயறு, துவரை உள்ளிட்ட பயிர்கள் மழையால் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள், உரிய நிவாரணம் கேட்டு மனு அளித்தனர்.
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் விவசாய பாதிப்புகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட வரவில்லை எனக் கூறி, விவசாயிகள் வயலில் இறங்கி அழுகிய நாற்றுகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments