'யாரும் பசியுடன் இருந்தால் அவர்களுக்கு பிடிக்காது!'- 15 வருடங்களாக தனி வீட்டில் பசியாற்றும் டாக்டர். தம்பதி

0 3906
டாக்டர் . சூரியபிரகாசம் மற்றும் டாக்டர். காமேஸ்வரி தம்பதி.

மனிதர்கள் பசியோடு இருந்தால், அந்த டாக்டர் தம்பதிக்கு பிடிக்காது. அதனால், யார் வந்தாலும் எப்போது வந்தாலும் சாப்பிட்டு விட்டு தங்கி செல்லும் வகையில் ஹைதரபாத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர் வீடு கட்டியுள்ளனர். 15 ஆண்டுகளாக இந்த வீட்டில் ஒரு முறை கூட கேஸ் தீர்ந்ததில்லை என்றும் பெருமையுடன் அந்த தம்பதி கூறுகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் . சூரியபிரகாசம் மற்றும் டாக்டர். காமேஸ்வரி தம்பதி. ஹைதரபாத் நகரத்திலுள்ள கொத்தபேட்டையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் வகையில் கடந்த 2006 - ஆம் ஆண்டு ஒரு வீட்டை கட்டினர். காலை 5 மணி முதல் இரவு 1 மணி வரை இங்கு யார் வேண்டுமானாலும் வந்து தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு போகலாம். அதற்கேற்ற வகையில், வீட்டினுள் அரிசி, பருப்பு , காய்கறி, எண்ணெய், கேஸ் அடுப்பு , தண்ணீர் எல்லாம் இருக்கும். 'அந்தாரி இல்லு' என்ற பெயர் கொண்ட இந்த வீட்டில் வள்ளலாரின் அணையாத அடுப்பு போல அடுப்பு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.

சுற்றிலும் குடியிருப்பு பகுதி இருப்பதால் போலீஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரவு 1 மணியிலிருந்து காலை 5 மணி வரை வீடு ‘பூட்டப்படுகிறது. மெஸ்சுக்கு பணம் கட்ட முடியாத மாணவர்கள், வேலை தேடி ஹைதரபாத் நகருக்கு வருபவர்கள் என யாராக இருந்தாலும் ஒரு வேளையாவது இந்த வீட்டுக்கு வந்து உணவு உண்டிருப்பார்கள். இந்த வீட்டுக்குள் நூலகமும் இயங்கி வருவதால், மாணவர்கள் தங்கள் அறிவையும் பெருக்கிக் கொள்கிறார்கள்.

தங்களின் சேவை குறித்து டாக்டர் சூர்ய பிரகாஷ் கூறுகையில், '' ஓபன் ஹவுஸில் எப்போதும் கேஸ் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வோம். சமையல் தெரியாதவர்கள் கூட இங்கு வந்து மற்றவர்களுடன் சேர்ந்து சமையல் கற்று கொள்கின்றனர். அப்படி வந்த மாணவர்களில் இன்று ஒருவர் கேட்டரிங் சர்வீஸே நடத்துகிறார் என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், இதற்காக, நாங்கள் யாரிடமிருந்தும் நன்கொடைகள் பெறுவதில்லை. எங்கள் சொந்த வருமானத்தில் இருந்தே செய்கிறோம். சோசியல் மீடியாக்களில் இருந்து நிதி திரட்டும் எண்ணமும் இல்லை. ஆனாலும், நல்ல மனம் படைத்தவர்கள் கருணையுடன் செய்யும் உதவிகளை பொருள்களாக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பசிக்கு மதமும் கிடையாது . இனமும் கிடையாது. இங்கு , வருபவர்களுக்கு தங்கள் வீடுகளில் உணவு சாப்பிடுவதை போன்றை உணர்வை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம். தினமும் 40 முதல் 50 பேர் இங்கு வருகிறார்கள். யாராவது மன வேதனையுடன் வந்தால் வீட்டில் இருக்கும் மணியை அடித்தால் நாங்கள் இருவருமே வந்து அவர்களின் முன் அமர்ந்து பிரச்னைகளை அமைதியாக கேட்போம். ஆறுதல் கூறுவோம். தற்கொலை எண்ணத்துடன் வருபவர்கள் மனம் மாறி சென்றதும் உண்டு'' என்றும் டாக்டர் சூர்ய பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

டாக்டர் . காமேஷ்வரி தெலங்கானா மாநிலத்தில் கிராமப் பெண்களின் கர்ப்பபை கோளாறுகளை தீர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments