ஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் நாசம்... பைக் எரிவதை கண்டு கையறு நிலையில் தவித்த இளைஞர்!
வேடசந்தூர் அருகே ஓடிக் கொண்டிருந்த பைக் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரூ. 1 லட்ச பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மறவபட்டியை சேர்ந்த பேட்ரிக் என்ற இளைஞர் தனியார் நூற்பாலையில் வேலை பார்க்கும் தன் தந்தையை வீட்டுக்கு அழைத்து செல்ல யமஹா FZ இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு லேசாக தீ பிடித்துள்ளது. இதை பார்த்த பேட்ரிக் உடனடியாக பைக்கை நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயன்றார். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவியதில் இருசக்கர வாகனம் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது . இந்த சம்பவம் குறித்து, நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை ரோந்து பணியாளர்கள் எரிந்து கொண்டிருந்த வண்டியின் மீது மணலைப் போட்டு தீயை அணைத்தனர் ஆனால் , அதற்குள் வண்டி முழுவதும் எரிந்து நாசமானது . தீ எரிவதை பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக பேட்ரிக் உயிர் தப்பினார். தன் கண்ணெதிரே பைக் தீயில் எரிந்து நாசமானதை பார்த்து பேட்ரிக் கதறினார்.
எரிந்து நாசமான இரு சக்கர வாகனத்தில் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments