தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி முகாம்... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

0 2700

தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொண்டார். 

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. கோவேக்சின், கோவிசீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் போடப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 166 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மையத்திலும் நாள் ஒன்றுக்கு தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2-ம் நாளான இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கேவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்றார்.

தடுப்பூசி என்பது இலக்கு சார்ந்த திட்டம் கிடையாது என்றும் பாதுகாப்பை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலுமே, முகக் கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியையும் பின்பற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments