கள்ளத்தனமாக மது விற்ற மாமியாரிடம் போலீஸ் விசாரணை ... மருமகள் எடுத்த விபரீத முடிவு!
திருக்கோவிலூர் அருகே கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானமடைந்து மருமகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருதங்குடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கமலாம்பாள் என்பவர் கள்ளத்தனமாக வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு, மாமியார் கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவது சகுந்தலாவுக்கு தெரிய வந்தது. கள்ளத்தமான மது விற்பனை செய்ய கூடாது என்று மாமியாரை சகுந்தலா தடுத்துள்ளார். இதன் காரணமாக, அடிக்கடி மாமியார் மருமகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மருமகளின் அறிவுரையை ஏற்று மனம் திருந்திய கமலாம்பாள் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதை கை விட்டுள்ளார். இதனால், மருமகள் சகுந்தலா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். மருமகள் மெச்சும் மாமியாராக கமலாம்பாள் மாறினார்.
ஆனால், சகுந்தலாவுக்கு பொங்கல் விடுமுறை எமனாக வந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சூழலில், மருமகளுக்கு தெரியாமல் மது பாட்டில்களை வாங்கி வந்த கமலாம்பாள் வீட்டின் அருகேயுள்ள கீற்று கொட்டகையில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த பொதுமக்கள் கமலாம்பாள் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்த கீற்று கொட்டகையை சேதப்படுத்தினர்.
மேலும், திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். போலீஸார் கமலாம்பாளை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து கொண்டிருந்தன. இந்த சம்பவத்தால் அவமானமடைந்தததாக கருதிய சகுந்தலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த திருப்பாலப்பந்தல் போலிசாரிடம், உடற்கூறு ஆய்வுக்கு சகுந்தலாவின் உடலை தர உறவினர்கள் மறுத்தனர். இதனால், போலீசாருக்கும் சகுந்தலாவின் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சகுந்தலாவின் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்று சகுந்தலாவின் உறவினர்களிடத்தில் எழுத்து மூலமாக எழுதி வாங்கிக் கொண்டு போலீஸார் அங்கிருந்து சென்றனர்.
மாமியாரின் கள்ள மது விற்பனையில் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments