என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!- சுதாரித்து கொண்ட மக்களால் மாந்தரீகர் வெளியேற்றம்

0 14791

சாயல்குடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட பச்சை பாவாவை ஜமாத்தார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஊரை விட்டு வெளியேற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் முகமது அலி ஜின்னா என்பவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஷேக் இப்ராஹிம் என்ற பச்சை பாவா தங்கியிருந்து மாந்திரீகம் குறி சொல்லுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் இவர் நடத்தும் நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். தான் தங்கியிருக்கும் வீடுமுழுவதும் பச்சை வண்ணத்தில் மாற்றி பச்சை நிற உடை அணிந்து மாந்தரீகம் செய்வது இவரின் வழக்கம். இதனால்தான் பச்சை பாவா என்று மக்கள் இவரை அழைத்து வந்தனர். வாலி நோக்கத்தில் பச்சை பாவா தங்கியிருந்து குறி சொல்வது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாலிநோக்கம் கிளை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

உடனே, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர்கள், இஸ்லாமிய மதத்தின் பெயரில் பொது மக்களை ஏமாற்றி பச்சை பாவா பிழைப்பு நடத்துவதாக புகார் அளித்தனர். அதே வேளையில், பச்சை பாவாவின் விநோத சம்பிராதய சடங்குகளை கண்டு அச்சம் அடைந்த கிராம மக்களும் உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஜமா அத் நிர்வாகிகள் மாந்திரீகர் தங்கியிருந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் சிறுமி ஒருவருக்கு மாந்தரீகம் என்ற பெயரில் ரத்த காயம் ஏற்படுத்த பச்சை பாவா முயன்று கொண்டிருந்தார்.

உடனடியாக, சுதாரித்துக் கொண்ட ஜமாஅத் நிர்வாகிகள் சிறுமியை பச்சை பாவாமிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி மாந்தரீகர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான அலி ஜின்னாவின் மகள் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, மாந்தரீகர் பச்சை பாவா குறித்து வாலிநோக்கம் போலீசில் ஜமாஅத்தார் முறையிட்டனர். மேலும், மாந்தரீகம் செய்து வந்த பச்சை பாவாவை தங்கள் ஊரில் இருந்து வெளியேற்றுமாறு வேண்டுகோள் வைத்தனர். மக்களின் வேண்டுகோளை ஏற்று போலீஸாரும் பச்சை பாவாவை எச்சரித்து வாலிநோக்கத்திலிருந்து வெளியேற்றினார். பச்சை பாவாவுக்கு சொந்த ஊர் வேலூர் ஆகும். தன் சொந்த ஊரிலும் மாந்தரீகம் என்ற பெயரில் பணம் பறித்து பொது மக்களால் பச்சை பாவா தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments