'அடுத்த முறை நிச்சயம் என் காளை வெற்றி பெறும்!' - வீரம் நிறைந்த மண்ணில் ஒரு தன்னம்பிக்கை பொண்ணு
மதுரையில் ஜல்லிக்கட்டில் தோற்ற தன் காளையை அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெற செய்வேன் என்று சபதமிட்டு சென்ற சிங்கப் பெண்ணை பார்த்து விழா கமிட்டியினர் மெய் சிலிர்த்து போனார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டி வருகின்றன. அமைச்சர் வீட்டு காளை முதல் சாமானியர்கள் வீட்டு காளை வரை களத்தில் இறங்கி காளையர்களை சிதறடித்து வருகின்றன. ஏராளமான இளம் பெண்களும் சிறுமிகளும்இ கூட காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு களம் காண வைத்துள்ளனர். அந்த வகையில், பாலமேட்டு ஜல்லிக்கட்டில் அன்னலட்சுமி என்ற 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வளர்த்து வந்த பெரிய கருப்பன் என்ற காளையை யாராலும் அடக்க முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக சிறுமியை காளைக்கு உரிய பயிற்சி கொடுத்து வளர்த்து வந்துள்ளார். வாடி வாசலில் அன்னலட்சுமி காளையை அவிழ்த்து விட அது சீறிப்பாய்ந்தது. அடக்க காத்திருந்த காளையர்களோ சிதறி கலைந்து விட்டனர்.
அன்னலட்சுமி போலவே மதுரையை ஐரவாதநல்லூர் சேர்ந்த 15 வயதே நிரம்பிய சிறுமி யோகதர்ஷினியும் 8 வயதில் இருந்து செல்லமாக ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். 10 ஆம் வகுப்பு படித்து வரும் யோகதர்ஷினி சிறு வயது முதலே காளைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. யோகதர்ஷினியின் தந்தையும் சகோதரர் அர்ஜுனும் யோதர்ஷினி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, தானே தனியாக காளையை வாடிவாசல் வரை கொண்டு சென்று அவிழ்த்து விடவும் யோகதர்ஷினி தொடங்கினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது, தன் காளையை யோகதர்ஷினி அவிழ்த்து விட்டார். ஆனாலும்,என்னவோ பயிற்சி போதாத காரணத்தினால் யோகதர்ஷினியின் காளை பிடி பட்டுவிட்டது.
யோகதர்ஷினியின் காளை பிடிபட்டு விட்டாலும், ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் தன்னாலும் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வாடிவாசல் வரை வந்து அவிழ்த்து முடியும் என்கிற மாணவியின் தைரியத்தையும் மனஉறுதியையும் பாராட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்கமிட்டி ஆறுதல் பரிசளிக்க முன் வந்தது. ஆனால், விழாக்கமிட்டியின் பரிசை ஏற்றுக் கொள்ளாத யோகதர்ஷினி, 'அடுத்த ஆண்டு தன் காளையை வெற்றி பெற வைத்து பிரிசை தட்டிச் செல்வேன் ' என்று உறுதியுடன் கூறி களத்தில் இருந்து அகன்றார். வீரம் விளைந்த மண்ணின் தன்னம்பிக்கை பெண்ணை கண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டி வியந்து நின்றது...!
Comments