பெண்களின் மண்டையை உடைத்த போதை ஆசாமி.. மின்கம்பத்தில் கட்டி அடித்துத் துவைத்த பொதுமக்கள்!

0 7922

கோயம்புத்தூர் அருகே கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தி பெண் ஒருவரின் மண்டையை உடைத்த போதை ஆசாமியை கட்டிவைத்து அடித்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிராஜ். இவரது வீட்டின் முன்பு கடந்த சனியன்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் போதையில் அமர்ந்திருந்தார். அந்த நபரை விசாரித்த காளிராஜ், தனது வீட்டின் முன்பு அமரக் கூடாது எனவும் வேறு பகுதிக்கு போகுமாறும் தெரிவித்தார். கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், காளிராஜை கூறியதைக் கேட்ட ஆத்திரத்தில் அவரை தாக்க முயன்றார். அவர் பயந்து வீட்டிற்குள் ஓட, துரத்தியபடி காளிராஜ் வீட்டிற்குள் நுழைந்த போதை ஆசாமி, அங்கு இருந்த பெண்களை தடியாலும், கற்களாலும் தாக்க தொடங்கினார். தடியால் தாக்கியதில் காளிராஜின் மனைவி கல்பனாவின் மண்டை உடைந்தது. மேலும் அம்மிக்கல்லை தூக்கி வீட்டில் இருந்த பெண்கள் மீது எறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பக்கத்தில் இருந்த தமிழ்மணி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த போதை நபர் தமிழ்மணியின் மனைவி சீதா என்பவரையும் குச்சியால் தாக்க தொடங்கினார். சீதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், கஞ்சா போதையில் இருந்த நபரை பிடித்து தாக்கியதுடன் அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டிபோட்டனர். மேலும் காயம் அடைந்த இரு பெண்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கம்பத்தில் கட்டபட்ட நபரிடம் பொது மக்கள் விசாரித்தனர். ஆனால் அப்போதும் அந்த நபர் பதில் சொல்ல முடியாமல் போதையில் இருந்தார். அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அவரை கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”கருமத்தம்பட்டி பகுதியில் தற்போது அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அருகே கஞ்சா விற்ற இரு இளைஞர்களை ஊர் பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments