பட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்!
சென்னை, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு எட்டு ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார்.
குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்குச் சென்னை, வாரணாசி, மும்பை தாதர், அகமதாபாத், டெல்லி ஹசரத் நிசாமுதீன், ரேவா ஆகிய நகரங்களில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் குஜராத்தின் பிரதாப் நகர் - கேவாடியா இடையே 2 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த 8 ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதேபோல் தாபோய் - சாண்டோடு இடையிலான அகலப்பாதை, பிரதாப் நகர் - கேவாடியா இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை ஆகியவற்றையும் தொடக்கி வைத்தார். தாபோய், சாண்டோட், கேவாடியா ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய ரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடியசைத்து ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர். இந்த ரயில் ஞாயிறுதோறும் இரவு பத்தரை மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
இதேபோல் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ரயில் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.
Comments