தக்கலை : 86 முன்கள பணியாளர்கள் தயக்கம்... தானே முன்வந்து தடுப்பூசி போட்டு முன்னுதாரணமான இளைஞர்!
தக்கலை அருகேயுள்ள பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட தேர்வு செய்யப்பட்ட முன்கள பணியாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், மருத்துவமனை எலக்ட்ரிசியன் ஒருவர் மட்டும் தானா முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 166-மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை, செம்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தக்கலை பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள் என 86-முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், இன்று காலை 86- முன்கள பணியாளர்களில் ஒருவர் கூட வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜையன் தலைமையில் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மதியம் 12 மணி வரை தேர்வு செய்யப்பட்ட 86-முன்கள பணியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வரவில்லை தொடர்ந்து, மருத்துவமனையில் எலக்ட்ரிசியனாக வேலை பார்க்கும் 32-வயதான ராஜேஷ் என்பவர் தாமாக முன் வந்து தான் தடுப்பூசி போட்டு கொள்வதாக விருப்பம் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட 86-நபர்களில் அவரின் பெயர் இல்லாத நிலையில் ராஜேசுக்கு மருத்துவர்கள் பல உடற் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். தொடர்ந்து, அந்த இளைஞர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.
முன்கள பணியாளர்களே தடுப்பூசி செலுத்த முன்வராத நிலையில், தானே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞரை மருத்துவர்கள் பாராட்டினர்.
Comments