புதிய பிரைவசி பாலிசியை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தது வாட்ஸ்அப்
புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், இதுவரை ஒப்புதல் வழங்காத பயனாளர்களின் கணக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி நீக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து செயலிகளும், பயனாளர்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக பிரைவசி பாலிசியை வைத்துள்ளன. வர்த்தக நோக்கங்களுக்காக பிரைவசி பாலிசியை வாட்ஸ்அப் மாற்றியமைத்ததை தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அந்தரங்கம் பேணும் உரிமைக்கு ஆபத்து என பரவிய தகவலால், லட்சக் கணக்கானோர் டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறினர். ஆனால், பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும், வாட்ஸ்அப் நிறுவனமோ, ஃபேஸ்புக் நிறுவனமோ அவற்றை அணுக முடியாது என வாட்ஸ்அப் விளக்கம் அளித்தும் பெரிய பயன் ஏற்படவில்லை.
இதையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பிரைவசி பாலிசி மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்த வாட்ஸ்அப், அதை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
புதிய டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்களை ஏற்க வேண்டும் அல்லது பிப்ரவரி 8ஆம் தேதியுடன் கணக்கு நீக்கப்படும் என முன்னர் எச்சரித்திருந்த வாட்ஸ்அப், அந்த அறிவிப்பையும் திரும்பப் பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குகளுக்கான புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வரும் மே 15 வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்குள் பிரைவசி மற்றும் பாதுகாப்பு குறித்து பயனாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
Comments