கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0 2522
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 3006 மையங்களில் தலா 100 பேர் வீதம், 3 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக, நாடு முழுவதும் 3006 மையங்களில் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி திட்ட தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கொரோனா பேரிடரால், சுகாதாரப் பணியாளர்களும், முன்களப் பணியாளர்களும் எதிர்கொண்ட சிரமங்களை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுத்துரைத்தார். கொரோனா குடும்பங்களை பிரித்தது, பிள்ளைகளை பார்க்க முடியாமல் தாய்மார்கள் ஏங்கி அழும் சூழ்நிலையை உருவாக்கியது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை சென்று பார்க்க முடியவில்லை, இறந்தவர்களுக்கு முறையாக சடங்குகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.

மனிதநேய நெறிமுறைகளின் அடிப்படையில், மிகவும் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி என்ற அடிப்படையில் டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முதல் கட்டத்தில் தடுப்பு மருந்து வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

உலக வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டதில்லை என மோடி கூறினார். சில நாடுகளில் மக்கள் தொகை 3 கோடிக்கும் குறைவு எனக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் முதல் கட்டத்திலேயே 3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்றார். இரண்டாவது கட்டத்தில் மேலும் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கமாக தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று கூறிய மோடி, குறுகிய காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், பிற தடுப்பூசி முயற்சிகளும் விரைவாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய சூழலுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் இரு தடுப்பூசிகளும் பாதுப்பானவை என தெரிவித்த பிரதமர், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒரு மாத இடைவெளியில் தவறாமல் இரு டோஸ்களை போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவின் விஞ்ஞானிகள் மீதும், தடுப்பூசி தயாரிக்கும் திறன் மீதும் உலகமே மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது எனக் கூறிய மோடி, பிற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்திய தடுப்பூசிகள் விலை மலிவானவை என்றார். தடுப்பூசி வந்துவிட்டதே என நினைத்து மாஸ்க் அணிவதை தவிர்க்கக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments