வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் மூழ்கிய விவசாயிகள்
கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பல ஊர்களில் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும், கால்வாய்களிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், புளியங்குளம், ஏரல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைத்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
திருவைகுண்டம் அணைக்கட்டின் தென்கால் பாசனத்தில் மிகப்பெரிய குளமான கடம்பாக்குளம் நிரம்பி மறுகால் வழியாகத் தண்ணீர் பாய்கிறது. கால்வாயில் கரைகடந்து தண்ணீர் பாய்வதால் இருபுறமும் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் பரப்பில் நெற்பயிர்களும், வாழைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் ,திருப்பனந்தாள் ,சோழபுரம் ,சாத்தங்குடி, கூடலூர், குலமங்கலம், நல்லிச்சேரி, ஒரத்தநாடு, நெய்வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதில் இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யப்படவிருந்த பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மூழ்கிப் போயுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையில் சிக்கிய சுமார் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கவும் தொடங்கி விட்டன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டாரத்தில் திம்மாச்சிபுரம், வதியம், கோட்டமேடு, மைலாடி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 13 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments