பாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 686 காளைகளும், 600 வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 18 காளைகளை அடங்கிய வீரர் முதல் பரிசை வென்றார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி காலையில் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை சீறிப்பாய்ந்தது.
இதை தொடர்ந்து காளைகள் வரிசையாக அவிழ்ந்து விடப்பட்டன. வாடி வாசலை கடந்த வந்த காளைகளை வீர ர்கள் பாய்ந்து அடக்கினார். காளைகளை அடக்க போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் களத்தில் வலம் வந்தனர்.
சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் துள்ளி பாய்ந்து சென்றன. சில காளைகள் பிடித்தவர்களை உதறி தள்ளி பாய்ச்சல் காட்டின. ஒரு சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.
காலையில் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 686 காளைகளும், 600 வீரர்களும் பங்கேற்றனர். இதில்
18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசை வென்றார். அவருக்கு காருடன் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.
17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.அவருக்கு ஒரு பவுன் தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திக்கிற்கு மூன்றாவது இடம் கிடைத்தது.
இதே போன்று யாருக்கும் சிக்காமல் சென்ற பாலமேட்டை சேர்ந்த யாதவா உறவின் முறையைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு காங்கேயம் பசு கன்றுடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
Comments