தாமிரபரணியில் வெள்ளம்... குடியிருப்புகளில் நீர் புகுந்தது

0 5224
தாமிரபரணியில் வெள்ளம்... குடியிருப்புகளில் நீர் புகுந்தது

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்மழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வழிகின்றன. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் 6 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்து வருகிறது.

இதனால் ஆறுகளில் இருந்து பிரியும் கால்வாய்களிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. திருநெல்வேலிக் கால்வாயில் இருந்து நயினார்குளத்துக்குத் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால், சேரன்மகாதேவி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சந்திப் பிள்ளையார் கோவில் முதல் காட்சி மண்டபம் வரை வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோலக் கல்லணை பள்ளிச் சாலையிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் - முக்காணி இடையே உள்ள பழைய பாலம் நீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதாலும், நேற்றிரவு மழை பெய்ததாலும் முக்காணியில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுப் பள்ளிகளிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இன்னல் அடைந்துள்ளனர்.

குடியிருப்புகளைச் சுற்றித் தேங்கியுள்ள மழை நீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி முத்து நகரில் மரம் சாய்ந்ததால் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் கருப்பசாமி தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த அவர் மனைவி அனுசுயா அவரைத் தூக்கிவிடச் சென்றபோது மின்கம்பியில் தெரியாமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாற்றில் நேற்றுக் குளித்த ரஞ்சித், காளிமுத்து ஆகியோர் வெள்ளத்தில் மூழ்கினர். இருவரையும் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். ரஞ்சித் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. காளிமுத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தாமிரபரணி ஆற்றிலும், கால்வாய்களிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், புளியங்குளம், ஏரல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைத்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் வடியச் சில நாட்கள் ஆகும் என்றும், அப்படி வடிந்தாலும் வாழைகள் அழுகியும் சாய்ந்தும் வீணாகிவிடும் என்றும் கூறி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருவைகுண்டம் அணைக்கட்டின் தென்கால் பாசனத்தில் மிகப்பெரிய குளமான கடம்பாக்குளம் நிரம்பி மறுகால் வழியாகத் தண்ணீர் பாய்கிறது. கால்வாயில் கரைகடந்து தண்ணீர் பாய்வதால் இருபுறமும் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் பரப்பில் நெற்பயிர்களும், வாழைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நெற்பயிர்களும், வாழைகளும் அழுகி வீணாகும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருபதுக்கு மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments