அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை... திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணை நிரம்பி அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் அதிகமாக வருவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வியாழன் மதியம் அபாய அளவான 46 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப அவ்வப்போது கூட்டியும், குறைத்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதோடு அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த உபரிநீரானது கோதையாறு வழியாக செல்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரானா பரவலை தடுக்க பொங்கல் விடுமுறை நாட்களில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருநெல்வேலியில் காரையாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments